பறவையியல் என்ற உயிரியல் சார்ந்த துறைப் பற்றி இன்று பரவலாகப் பேசப்படுகிறது. பறவைகளின் வாழ்நிலைகளைப் பற்றியக் குறிப்புகள் பறவையியல் மூலம் அறியப்படுகிறது. ஆனால், இன்றைய அறிவியல் கூறுவதைப் பண்டையத் தமிழர்கள், தங்களது நடைமுறை அறிவால் பல்லாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளனர்.
தொல்காப்பியம் தொடங்கி, தமிழின் சங்க இலக்கிய நூல்கள் அனைத்திலும் இயற்கை மற்றும் உயிரினங்கள் குறித்த செய்திகள் அதிகளவு காணப்படுகின்றன. அதிலும் பறவைகளைப் பற்றியக் குறிப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. தொல்காப்பியம் 'மாவும் புள்ளும் ஐயறி விளவே' என்று கூறுகிறது. எனவே ஐந்தறிவு உயிராகப் பறவையினம் பாகுபடுத்தப்பட்டுள்ளது. பறவைகள் 'புள்' என்ற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளன. பார்ப்பு, பிள்ளை, பறழ், குட்டி ஆகியவை பறவைகளின் இளமைப் பெயர்களாக அறியப்படுகின்றன. பெண் இனப்பறவைகள் பெடை, பேடை, பெட்டை, அளகு என்றும் ஆண் இனப்பறவைகள் சேவல், ஏற்றை என்றும் வழங்கப்படுவதாகத் தொல்காப்பிய மரபியல் வழி மூலம் அறிய முடிகிறது.
பறவைகள் வாழும் சூழ்நிலை, உண்ணும் உணவு, கூடுகட்டி வாழும் முறை, முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்தல், இனப்பெருக்கம் ஆகிய பலவற்றையும் கண்டறிந்து சங்கப்புலவர்கள் பாடல்களில் கூறியுள்ளனர். பறவைகளின் பறக்கும் திசையைக் கண்டும், அவற்றின் குரலைக் கேட்டும் பழந்தமிழர் இயற்கை நிகழ்வுகளைக் கணித்தனர். எனவே தான் புள் என்ற சொல்லிற்கு நண்ணிமித்தம் என்ற பொருளும் காணப்படுகிறது. "புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்" என்ற மலைபடுகடாம் பாடல் வரி அதற்குச் சான்றாகும்.
சுமார் 58 பறவைகள் குறித்து சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கம் மருவிய நூல்களில் சுமார் 6 பறவைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இயற்கையின் அமைப்பு கொண்டு, வாழிடத்தை ஐந்து வகை நிலங்களாகப் பிரித்தரிந்த தமிழர்கள், ஒவ்வொரு நிலத்திலும் காணப்பட்ட பறவைகளையும் தனித்தனியே பதிவு செய்துள்ளனர்.
கிளி, மயில், மலையுறை குருவி, வங்கா ஆகியவை சங்க இலக்கியம் காட்டும் குறிஞ்சி நிலப்பறவைகளாகும்.
கானக்கோழி. குயில், தூக்கணாங்குருவி, புறா, மடாப்புறா, மணிப்புறா, சிறிய தவிட்டுப்புறா, சாம்பல்புறா, போகில் (பச்சைப்புறாவினம்) போன்றவை முல்லை நிலப்பறவைகள் ஆகும்.
காக்கை-சிறுகருங்காக்கை, அண்டங்காக்கை, கோழி-கம்புள் கோழி, நீர்க்கோழி, நீலக்கோழி, மனைக்கோழி, மனையுறை, குருவி ஆகியவைமருதநிலப்பறவைகள் ஆகும்.
அன்றில், அன்னம், குருகு-இனக்குருகு, வெண்குருகு, பசுங்கால் குருகு, வெண்பூக்குருகு, வெண்தலைக்குருகு, கருங்கால் குருகு, வெள்ளாங்குருகு, சிறுவெள்ளாங்குருகு, யானையங்குருகு,கொக்கு, சிரல்(மீன்கொத்திக்குருவி), சிறுவெண்காக்கை, நாரை, போன்றவை நெய்தல் நிலப்பறவைகளாகும்.
ஆந்தை, ஊமன், வானம்பாடி, குடிஞை, குரால், கூகை, எழால், குடுமி எழால், கழுகு, எருவை, பாறு, பொகுவல், கிணந்துள், பருந்து , பூழ் (கௌதாரி) , குறும்பூழ் (காடை) போன்றவை பாலைநிலப்பறவைகளாகும்.
நெய்தலில் மட்டும் காணக்கூடிய கடற்காக்கைகள் மருதத்திலோ, குறிஞ்சியிலோ, பாலையிலோ கூறப்படவில்லை. நீர்ப்பறவைகள் மருதத்திணை மற்றும் நெய்தல் திணையில் மட்டுமே கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சி நிலத்தில் காணப்படும் பறவைகள் வேறு எந்த நிலத்திலும் கூறப்படாததும் குறிப்பிடத்தக்கது. எனவே பறவைகள் வாழும் சூழ்நிலையையும், இருப்பிடங்களையும் நன்கு கண்டுனர்ந்தே சங்கப் புலவர்கள் பாடல்களாகப் பதிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
பூநாரையில் இருந்து உள்ளான் வரை ஏறக்குறைய 22 நீர்ப்பறவைகளைப் பற்றிச் செய்திகள் பலவற்றைப் பதிவு செய்துள்ளனர். மூன்று வகையான வல்லூறுகள், இரு வகையான காக்கைகள், ஐந்து வகையான புறாக்கள், மூன்று வகையான பிணம் தின்னிக் கழுகுகள், இரு வகையான கழுகுகளைக் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றையத் தமிழகத்தில், 'மைனா' எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் பறவையை, 'நாகணவாய்ப் புள்' என சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
சங்க இலக்கியங்களில் வலசைப் பறவைகள், வாழிடப் பறவைகள் குறித்தும், பறவைகளின் காப்பிடங்கள் குறித்தும் கூடப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலசை செல்வதற்கு முன்பு, ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்றுகூடி, சேர்ந்து செல்வதை, 'ஓசனித்தல்' என்ற வார்த்தையில் அழகுபடப் பாடியுள்ளனர்.
ஆந்தையைப் பேரறிவுள்ளப் பறவையாக அக்காலத் தமிழர்கள் கருதியுள்ளனர். 'அறிவுடையவன்' என்ற பொருளில் 'ஆதன்' என்ற சொல் சங்ககால வழக்கத்தில் இருந்ததால், ஆதன்+அந்தை என்பதில் இருந்து ஆந்தை என்றப் பெயர் உருவாகி இருக்கலாம் எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். ஆந்தையைப் பற்றிய இத்தகைய உயர்வான கருத்தால், ‘சிறைக்குடி ஆந்தையார்’, ‘கொட்டியூர்நல்லாந்தையார்’, ‘பிசிராந்தையார்’, ‘மன்னெயில் ஆந்தை’, ‘ஒதல் ஆந்தையார்’ என அறிவில் சிறந்தப் புலவர்களின் பெயர்களில் ஆந்தையின் பெயரை இணைத்து, ஆந்தைகளுக்கு அழியாப் புகழைத் தந்துள்ளனர். மேலும் ஆந்தையை, ‘குரால்’, ‘குடிஞை’, ‘ஊமன்’, ‘ஆண்டலை’, ‘பகண்டை’, ‘சிறுகூகை’, ‘சாக் குருவி’ என பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளதுடன், ஆறு வகையான ஆந்தைகளைப் பற்றியும் பாடியுள்ளனர். பேராந்தையான கொம்பன் ஆந்தையை ‘பெரும் புள்’ என அதன் உருவத்தைக் கொண்டுப் பதிவு செய்துள்ளனர். ஆந்தைகள் மரப்பொந்துகளில் முட்டையிடுவதைப் புறநானூறு, நற்றிணைப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பறவைகளின் இயல்பான பறக்கும் திறனைக் கண்டு விமானம் கண்டுபிடித்தார்கள். அது போல பறவைகளை உற்று நோக்கிப் பலத் தகவல்களைச் சங்க நூல்கள் தந்துள்ளன. நற்றிணையில் தூக்கனாங்குருவி பற்றிய பாடல் இடம் பெற்றள்ளது. அதன் கூடு பற்றிய விபரங்கள் வியப்பைத் தருவதாக உள்ளது. கொக்கு என்ற பறவை அம்பு போல் பறப்பதை பற்றியும், பறவைகள் இரவில் இடம் பெயர்வதைப் பற்றியும் பிசிராந்தையார் என்ற புலவர் தனது பாடல்களில் குறிப்பிடுகிறார். குமரகுருபரர் எழுதிய மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழில், "நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று நாரையின் உடல் உறுப்புகள் குறித்த நுணுக்கமானத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
எனவே, சங்க இலக்கியங்கள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல. அவையே, அன்றைய நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் ஆவணக் களஞ்சியங்களாகும். சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட அறிவியல் இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாக விளங்குகிறது.