ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிற்கு சசிதர் ஜெகதீசன் மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 2026 அக்டோபர் 26ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது இந்த மறு நியமனத்திற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.கடந்த திங்கட்கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குனராக சசிதர் ஜெகதீசன் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. சசிதர் ஜெகதீசன் ஹெச்டிஎஃப்சி வங்கியில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்புகளை வகிப்பதற்கு முன்னால், அவர் வங்கியின் தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.














