சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான், ஜி 20 மாநாட்டை ஒட்டி இந்தியா வந்திருந்தார். அதை தொடர்ந்து, அவர் இந்திய சவுதி அரேபியா கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். இதன்போது, இந்தியா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
சவுதி அரேபியா இளவரசர் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய சவுதி அரேபியா கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டு இருந்தார். அதன் போது, இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான வர்த்தக உறவை ஒழுங்குபடுத்த, இந்திய சவுதி அரேபிய கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் முதல் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இதற்காக, சவுதி அரேபியா இளவரசர் சல்மான் உடன், அந்நாட்டைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் மற்றும் 100 தொழிலதிபர்கள் வருகை தந்திருந்தனர். இந்த கூட்டத்தின் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் வளர்ச்சிக்கு பரஸ்பர உதவிகளை வழங்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.