சவுதி அரேபிய தூதரகம், வியாழக்கிழமை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபிய விசா பெறுவதற்கு, காவல்துறையின் சான்றிதழ் அவசியம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதி இந்தியர்களுக்கு தளர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை சான்றிதழ் என்பது ஒரு நபரின் குற்றப்பின்னணியை உறுதி செய்வதாக அமையும். அதிலிருந்து தற்போது இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல இந்தியர்கள் எளிதாக சவுதி அரேபியா செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், சவுதி அரேபியாவில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.