கடந்த மே 22 ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில், சவுதி அரேபிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 9 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று, அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பி உள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலம், 9 மணி நேரத்திற்கு பிறகு, மெக்சிகோ வளைகுடா பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், சவுதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கரணி, சவுதி அரேபியாவின் முதல் விண்வெளி வீராங்கனை ரயானா பர்ணாவி ஆகியோர் பூமி திரும்பி உள்ளனர். மேலும், வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் விண்ணுக்கு சென்ற அமெரிக்க தொழிலதிபர் ஜான் ஷாப்னரும், இவர்களுடன் டிராகன் விண்கலத்தில் பூமி திரும்பி உள்ளார். இவர்களது விண்வெளி பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.