குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.