புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக 500 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக 500 ரூபாய் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 18 வயது நிரம்பிய 1 லட்சத்து 25 ஆயிரத்து 732 நபர்களுக்கு, நபர் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் என்ற வீதத்தில் ரூ.6,28,66,000/- இலவச வேட்டி சேலைகளுக்கு பதிலாக, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.