இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழ்நிலையில்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பயங்கரவாத முகாம்களை தாக்கியுள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் போன்ற பகுதிகளில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதையும், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழ்நிலையில், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய 5 எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.














