விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் குறுநில மன்னரின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில் கி.பி.10ஆம் நூற்றாண்டு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட வரலாற்று தடயங்கள் இருப்பதாக தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கல்வெட்டுகள் மற்றும் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபற்றி விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறுகையில்,
இக்கல்வெட்டுகள் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவை சம்புவராய மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் ஆகும். இக்கல்வெட்டுகள் சிவன் கோயிலுக்கு உரியவை. கி.பி.13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பாக ஆற்காடு கிராமத்தில் சிவன் கோயில் இருந்து மறைந்துள்ளது.இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அண்ணாமலையார் குளத்தருகே மிகப்பெரிய சிவலிங்கம், நந்தி மண்ணில் இருந்து வெளிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதே பகுதியில் தலையில்லாத சிற்பம் ஒன்றும் களஆய்வில் கண்டறியப்பட்டது. இது, கி.பி.1212 முதல் கி.பி.1231 வரை கெடிலம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் ஆகும். இம்மன்னனின் முழு உருவச் சிலை ஆற்காடு கிராமத்திற்கு அருகில் உள்ள ஆ.கூடலூர் கிராமத்தில் உள்ளது.
கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அங்கிருந்த சிவன் கோயில் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.