66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கி டைனோசர்களை அழித்த விண்கல் நிகழ்வு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்பதை புதிய ஆய்வு தெரிவிக்கிறது. விஞ்ஞானிகள், அந்த காலகட்டத்தில் பூமியைத் தாக்கிய இன்னொரு விண்கல் குறித்த தகவலை கண்டுபிடித்துள்ளனர்.
கினியா கடற்கரையில் உள்ள நாடிர் என்ற இடத்தில் 8 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய பள்ளம் இருப்பதை நீண்ட காலமாக விஞ்ஞானிகள் கவனித்து வந்தனர். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த பள்ளம் சுமார் 400 மீட்டர் அகலம் கொண்ட ஒரு விண்கல் மணிக்கு 72,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைத் தாக்கியதால் உருவானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாக்கத்தால் பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டு, கடலில் பெரும் சுனாமி எழுந்திருக்கிறது. சுனாமியின் உயரம் 800 மீட்டரைத் தாண்டியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் இறுதியில் பூமியை பல விண்கற்கள் தாக்கியிருக்கலாம் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. டைனோசர்களை அழித்த விண்கல் மட்டும் அல்லாமல், பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதால் உலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, பல உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.