உக்ரைன் ராணுவ தாக்குதலையடுத்து மற்றொரு மாகாணமான பெல்கோரோட் பகுதியில் ரஷ்யா அவசரநிலை பிறப்பித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் உக்ரைன் வீரர்கள் பத்தாயிரம் பேர் ரஷ்யாவின் கூர்ஸ் மாகாணத்தில் நுழைந்து இடத்தை ஆக்கிரமித்தினர். இதையடுத்து அந்த மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இவர்களை விரட்ட ரஷ்ய ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு மாகாணமான பெல்கோரோட் பகுதியில் ரஷ்யா அவசரநிலை பிறப்பித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பெல்கோரோட் பிராந்திய கவர்னர் கூறியுள்ளார். இங்கு 5 ஆயிரம் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு மோசமான சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 11 ஆயிரம் பேர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கவர்னர் கினாட்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா சார்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் இருநாட்டு வீரர்களும் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூர்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் நோக்கி ரஷ்யா ஏவுகணைகளை தாக்குவதால் அதை தடுத்து நிறுத்தவே இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்றது என்று உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.