தேச துரோக சட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம் தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, மக்கள் சிவில் உரிமை கழகம் (பியுசிஎல்) உள்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த மே மாதம் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தேச துரோக வழக்கை பதிவு செய்ய தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டது.
தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படும் 124(ஏ) சட்ட பிரிவு விவகாரத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், பெலா திரிவேதி அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, இந்த சட்டம் குறித்து வரவிருக்கும் குளிர்கால நாடாளுமன்ற தொடரில் மாற்றங்கள் செய்யப்படலாம். எனவே, மேலும், கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த சட்டம் தொடர்பாக மறு ஆய்வு செய்யவும், அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக 2023ம் ஆண்டு ஜனவரி 2வது வாரம் வழக்கை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.