இந்த வாரம், பங்குச் சந்தை தொடங்கிய போதே ஏற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பங்குகளும் நேர்மறையாக இருந்தன. இன்று காலை 9:40 மணி அளவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 101.49 புள்ளிகள் ஏற்றத்துடன் இருந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 92.85 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது.
இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் குறியீட்டு எண் 61051.85 ஆகவும், நிஃப்டி குறியீட்டு எண் 18210.00 ஆகவும் இருந்தது. அதன்பின்னர், பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் இருந்த பங்குச் சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 234.79 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி குறியீட்டு எண் 85.65 புள்ளிகள் உயர்ந்தும் நிறைவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 61185.15 ஆகவும், நிஃப்டி குறியீட்டு எண் 18202.80 ஆகவும் பதிவாகி இருந்தது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உலோக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள், இன்று உயர்ந்து காணப்பட்டன. இதனால் இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் உணரப்பட்டது. குறிப்பாக, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன். எம் என் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை பதிவு செய்திருந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் ஃபார்மா, டைட்டன், டாக்டர் ரெட்டீஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்திருந்தன.