கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 16 மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சி இது என கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1628 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 460 புள்ளிகளும் இழந்துள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில் 4.33 லட்சம் கோடி மதிப்பில் முதலீட்டாளர்களுக்கு இழப்பு நேரிட்டுள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தையின் சரிவு போக்கு இன்றும் நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 313.9 புள்ளிகள் சரிந்து, 71786.86 ஆகவும் நிஃப்டி 109.71 புள்ளிகள் சரிந்து, 21462.25 ஆகவும் உள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், சன் பார்மா, டெக் மஹிந்திரா, சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா, அப்போலோ ஹாஸ்பிடல், பாரத் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், எல்டிஐ மைன்ட் ட்ரீ, ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, டைட்டன், பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டஸ் இன்ட் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை சரிவடைந்துள்ளன.