தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தின் இடையில், சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் இழந்தது. ஆனால், இறுதியில் சற்று ஏற்றம் பெற்ற சென்செக்ஸ், 542.10 புள்ளிகளை இழந்து 65240.68 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்திய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண், இன்றைய வர்த்தக நேர இறுதியில், 144.9 புள்ளிகளை இழந்து, 19381.65 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த சரிவில் மிக முக்கிய பங்கு வகித்ததாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் தவிர, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், ஓஎன்ஜிசி, எஸ் பி ஐ, ஹெச் டி எப் சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா லிமிடெட், கோட்டக் வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது. அதை முன்னிட்டு, இன்றைய வர்த்தகத்தில், அதானி குழும பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. குறிப்பாக, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. இவை தவிர, ஈச்சர் மோட்டார்ஸ், டேவிஸ் லேப்ஸ், என் டி பி சி நிறுவன பங்குகளும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன.