டி-ஷர்ட் களில் சென்சார்களை பொருத்துவதன் மூலம், மனிதர்களின் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அளவிட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் பயோ என்ஜினியரிங் துறையைச் சார்ந்த முனைவர் பட்டப்படிப்பு மாணவர் பாகத் அல்சாபவுனா, இந்த ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளார். மனித உடலில் உள்ள அம்மோனியா அளவை கணக்கிடும் சென்சார்கள் வாயிலாக, சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றின் கண்காணிப்பை சாத்தியப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது மற்றும் உறங்கும் போது இந்த சென்சார் பொருத்தப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து கொண்டால், சீரான இதயத் துடிப்பு மற்றும் சீரான சுவாசம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
இதற்காக, பிரத்தியேகமான முறையில், சென்சார் கருவிகளை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எம்பிராய்டரி இயந்திரங்கள் மூலம் டி-ஷர்ட் களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பத்தை முகக் கவசங்களில் பயன்படுத்தவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். முகக் கவசங்களில் சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், தொழிற்சாலைகளில் ஏற்படும் விஷவாயு கசிவு, ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அம்மோனியா அளவு, மனிதர்களின் சுவாசம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.














