செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னர் ரவி கடிதம் மூலம் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு திடீரென அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், "அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையடுத்து 5 மணி நேரத்துக்குள் அவர் மீண்டும் ஒரு கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பினார். அதில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய எனது கடிதத்தை பார்த்து இருப்பீர்கள். இது தொடர்பாக மத்திய உள்மந்திரி என்னை தொடர்பு கொண்டு சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞர் மூலம் இந்த விவகாரத்தில் கருத்துக்களை பெறும்படியும் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் எனது முடிவை அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.














