கோயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 632 கோயில்களுக்கு ரூ.128 கோடியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய திருப்பணிகள் நடத்துவதில் தேசிய அளவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும், கோயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
கோயில்களில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்தாலி அளிக்கப்படும். கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். சிறுவாபுரி, மேல்மலையனூர், குமாரவயலூர், மருதமலை, அழகர் கோயிலில் ரூ.200 கோடியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 249 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.