இன்று மற்றும் நாளை பூமியை கடுமையான சூரியப் புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூரியப் புயல் காரணமாக பூமியில் உள்ள மின் கட்டமைப்புகள், தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படும் ரேடியோ சிக்னல்கள் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூரிய வெடிப்பை கண்டறிந்த பிறகு அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தற்போது ஹெலன் மற்றும் மில்டன் என்ற இரண்டு சூறாவளிகளை எதிர்கொண்டு வருவதால், இந்த சூரியப் புயல் மேலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை (FEMA) ஆகியவை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூரியப் புயல் மே மாதத்தில் ஏற்பட்ட சூரியப் புயல் போல் வலுவாக இல்லாவிட்டாலும், நிபுணர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சூரியப் புயல் காரணமாக ஆரோராக்கள் தெற்கு, மத்திய, மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியா வரை தெரிய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.