பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி, பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அதிர்ச்சி தரும் அறிக்கை வெளிவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த 11 மாநிலங்களில் மட்டுமே, கிட்டத்தட்ட 85% இடைநிற்றல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. இங்கு மட்டுமே, மொத்தம் 30 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ராஜஸ்தான், அஸ்ஸாம், கர்நாடகா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், அரியானா ஆகிய மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பை நிறுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
அதே வேளையில், 12 ஆம் வகுப்பில் பள்ளியிலிருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 77% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 18 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பை பாதியில் நிறுத்தி உள்ளதாக மத்திய கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வின் அழுத்தம், மதிப்பெண் குறைவால் ஏற்படும் அச்சம், நுழைவுத் தேர்வுகள் குறித்த பயம் போன்ற காரணங்களால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைநிற்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.