சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மத்திய ஐரோப்பிய நாடு சுலோவேக்கியா. இதன் பிரதமர் ராபர்ட் பிகோ. இவருக்கு வயது 59. இவர் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்றார். அதற்கு முன்பே இரண்டு முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். இவர் ரஷ்ய ஆதரவாளர். அவர் நேற்று ஹன்ட்ளோவா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு திரண்டு இருந்த மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ராபர்ட்டை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராபர்ட் வயிற்றில் நான்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அங்கு கூட்டத்தில் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. ராபர்ட்டை அங்கிருந்து மீட்டு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் பன்ஸ்கா பிஸ்ட்ரிக்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர். தற்போது அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே துப்பாக்கியால் சட்ட மர்ப நபரை காவல்துறை கைது செய்தது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.