இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுகத்தின் 6-ம் எண் நுழைவு வாயில் பகுதிக்குள் 8 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றனர். துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விலை உயர்ந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் அவர்கள் செல்ல முயற்சி செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு வீரர் உடனே துப்பாக்கி சூடு நடத்தினார். அத்துமீறி நுழைய முயன்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. துப்பாக்கி சத்தத்தை கேட்டு மற்ற பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்து கீழே கிடந்தனர். இதில் 3 பெண்கள் அடங்குவர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'துறைமுகத்தில் இரும்பு திருட வந்த 2 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தபோது அவர்களை மீட்க கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ஒரு பாதுகாப்பு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர். இதனால் மற்றொரு வீரர் அந்த கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த கும்பலில் உள்ள சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று தெரிவித்தார்.