தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். பயணம் முடிந்து நேற்று இரவு 10:30 மணி அளவில் அவர் தமிழகம் திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவரது பயணத்தில் 3233 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினார். மேலும், இதன் மூலம், தமிழகத்தில் 5000 வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது: “தமிழகத்தின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தற்போதைய தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் இணைந்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களை வகுத்தனர். அதன்படி, சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் போது, குறைந்தபட்சம் 3000 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டது. அதன் வழியாக, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தின் அடுத்த கட்ட தொழில் மேம்பாட்டு வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தூண்டுகோலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.














