சிங்கப்பூரில் வெளிநாட்டினர் பணி செய்வதற்கான விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சிங்கப்பூருக்கு சென்று பணியாற்றும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் தகுதி வாய்ந்த மற்றும் திறமையான ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, சிங்கப்பூர் அரசு, விசா நடைமுறையில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டினரின் பணி விசா காலத்தை நீட்டித்துள்ளது. இது குறித்து, அந்நாட்டின் மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஜனவரி 1ம் தேதி முதல், Overseas Networks and Expertise எனப்படும் புதிய ‘ஒன்’ (ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளம் பெறும் வெளிநாட்டினருக்கு, 5 ஆண்டுகளுக்கு பணி விசா நீட்டித்து வழங்கப்படும். இத்துடன், அவர்களுடன் சார்பு விசாவில் வந்தவர்களும் சிங்கப்பூரில் வேலை தேட அனுமதிக்கப்படுவர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக, தகுதி வாய்ந்த ஊழியர்கள் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றும், சர்வதேச வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து, அந்நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் டான் சீ லெங் கூறியதாவது: "தகுதி வாய்ந்த ஊழியர்கள் வேலைக்காகவும், சிறந்த திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் சிங்கப்பூரை நாடுகின்றனர். எனவே, திறமைகளுக்கான உலகளாவிய மையமாக சிங்கப்பூரை ஆக்குவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.