வங்காளதேசத்தில் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஆறு மாணவர்கள் பலியாகினர்.
இதில் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு முறை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதற்கு ஆளும் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தின் போது ஆறு மாணவர்கள் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. போலீசார் உட்பட நூற்றுக்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.