ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல முன்னணி மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி, கிட்டத்தட்ட 3000 பேரை 2023 ஆம் ஆண்டில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்து, வர்த்தகம் மற்றும் செயல் திறனை மேம்படுத்த இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக எஸ்ஏபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ்ஏபி நிறுவனத்தில் தற்போது 120,000 பணியாளர்கள் உள்ளனர். அதில் 3000 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 2.5% என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத் துறையில், மெட்டா, அமேசான், கூகுள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து, எஸ்ஏபியும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், 2024 ஆம் ஆண்டுக்குள் 300 முதல் 350 மில்லியன் யூரோக்கள் வரை சேமிக்க முடியும் என்று எஸ்ஏபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும் எனவும் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மைய வர்த்தகமான கிளவுட் துறையில் இந்த சேமிப்பு முதலீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், எஸ்ஏபி நிறுவனத்தின் லாபம் 10 முதல் 13% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.