ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்றது. இது பகுதி சூரிய கிரகணம் ஆகும். அதாவது உலகின் எந்தப் பகுதியிலும் முழுதாக சூரியன் மறைக்கப்படாது. சூரியனை நிலவு பகுதியாக மறைப்பதால் இது நிகழ்கிறது. இந்த கிரகணத்தை தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று மதியம் 2.15 மணியளவில் தொடங்கி, மாலை சுமார் 6.30 வரையில் இந்த கிரகணம் நீடித்தது. ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கிரகணம் தென்பட்டது. குறிப்பாக, ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் 80% கிரகணம் காணப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை, மாலை 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நைனிடால் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆகியவை கிரகணத்தை யூடியூபில் ஒளிபரப்பு செய்தன. வானியல் ஆர்வலர்கள் இதனை கண்டு களித்தனர். மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வானியல் மையங்களில் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு காட்டப்பட்டது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மை உடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில், கிரகணம் காரணமாக இந்தியாவின் முக்கிய கோவில்களில் இன்று நடை சாத்தப்பட்டது.
இன்றைக்கு பின்னர், அடுத்த பகுதி சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டில், அடுத்ததாக முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி நடக்கவுள்ள இது, பகுதி கிரகணமாக தமிழகத்தில் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.