கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் அதிரடி தாக்குதல் நடத்தினர். சர்வதேச நாடுகளை இந்த திடீர் தாக்குதல் உலுக்கியது. இதே போன்ற தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், புதிய போர் பயிற்சி ஒன்றில் அமெரிக்க ராணுவமும் தென்கொரிய ராணுவமும் ஈடுபட்டுள்ளன.ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டால், ஆரம்ப நிலையிலேயே தாக்குதலை முறியடிக்கும் பயிற்சியில் அமெரிக்க தென் கொரிய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5400 ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 300 பீரங்கிகள் , சில போர் விமானங்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்டன. ஒருவேளை, வடகொரியா, ஹமாஸ் போன்ற தாக்குதலில் ஈடுபட்டால், இந்தப் பயிற்சி அதற்கான பதிலடி தரும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.














