யூடெல்சாட் நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தகவல் தொடர்பு வலையமைப்பிற்காக 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி இந்த செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளன. கடந்த 2023 செப்டம்பரில் ஒன் வெப் நிறுவனத்துடன் இணைந்த பிறகு இது யூடெல்சாட் நிறுவனத்தின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, யூடெல்சாட் நிறுவனம் 600 லோ எர்த் ஆர்பிட் செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள ஒலிபரப்பாளர்கள் மற்றும் ஆரஞ்சு, டெல்ஸ்ட்ரா போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது, இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள யூடெல்சாட் நிறுவனம், இதற்காக ஏற்கனவே $4 பில்லியன் மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மேலும், விமானங்களில் இணைய சேவைகளை வழங்கும் திட்டத்திலும் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவை மூலம் அதிக வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளது.