இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வரும் அக்டோபர் 28 அன்று குஜராத்தின் வதோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் அமைத்துள்ள C-295 விமான உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கின்றனர். இந்தியாவில் தனியார் துறையில் விமான உற்பத்தி செய்யும் முதல் திட்டமாக இது அமைந்துள்ளது. இது, இந்தியாவின் விமானத் தொழில் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை தற்போது பயன்படுத்தி வரும் பழைய ஏவோரோ விமானங்களுக்கு பதிலாக இந்த C-295 விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மொத்தம் 56 விமானங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. இதில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மீதமுள்ள 40 விமானங்கள் வதோதரா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் C-295 விமானம் 2026 செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி விமானம் 2031 ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும். இந்த விமானம் 5 முதல் 10 டன் வரை எடையுள்ள பொருட்களையும், 71 வீரர்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.