குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் நாளை மறுதினம் சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை மறுதினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகள் விரைந்து தீர்வு செய்யப்படும்.