தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறுகையில், தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவ.12, 13, 26, 27-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இதுவரை 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், இங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம். இதற்கு படிவம் 6ஏ வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை இதுவரை 9 பேர் அளித்துள்ளனர். பெயர் சேர்க்கப்படும் பட்சத்தில், அவர்கள் தேர்தலின்போது நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.