இந்தியாவின் பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்து, 107 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில், இது 23.3 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 2794 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செலவுகள் 2687 கோடியாக பதிவாகியுள்ளது. இவை, முந்தைய ஆண்டில் 2679 மற்றும் 2579 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து பேசிய ஸ்பைஸ் ஜெட் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சிங், "இந்த காலாண்டுக்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் அடைந்து விட்டோம். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளிலுமே செயல் திறனை அதிகரித்துள்ளோம்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.