அமெரிக்காவிற்கு ஹெச் 1 பி விசா மூலம் சென்றவர்களின் கணவன் மற்றும் மனைவி அமெரிக்காவில் பணி புரியலாம் என்று அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி தருவதாக அமைந்துள்ளது. இதன் மூலம், குடும்பங்களில் ஒருவரை ஒருவர் பிரிவது தவிர்க்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஹெச் 4 விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Save Jobs USA என்ற அமைப்பு, ஹெச் 1 பி விசாதாரர்களின் வாழ்க்கைத் துணைக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அங்கீகரிக்கும் விதிமுறைகளை நீக்கக்கோரி வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி தன்யா சுட்கான், "ஹெச் 1 பி விசாதாரர்களுடன் ஹெச் 4 விசா மூலம் வந்தவர்கள், அமெரிக்காவில் தங்கியிருந்து பணி செய்வதற்கான அங்கீகாரம், நாடாளுமன்றத்தால் வெளிப்படையாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை நீக்க முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.