இலங்கையில் டோக் மக்காக் வகை குரங்குகள் 20 முதல் 30 லட்சம் எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை குரங்குகள் அரிய வகை குரங்குகளாகவும், அருகி வரும் குரங்கு இனமாகவும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவுக்கு ஒரு லட்சம் டோக் மக்காக் குரங்குகளை ஏற்றுமதி செய்ய உள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
கடந்த வாரம், சீனாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில், குரங்குகளை காட்சிப்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இவரது அறிவிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இலங்கை வேளாண்மை அமைச்சகத்தின் உயர் அதிகாரி குணதாச சமரசிங்க, “குரங்குகள், பயிர்களை நாசம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, சாகுபடி பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு குரங்குகள் பிடிக்கப்படும். பல்வேறு கட்டங்களாக அவை சீனாவிற்கு அனுப்பப்படும்” என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.