இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இலங்கை பிரிவு லங்கா ஐஓசி ஆகும். இந்த நிறுவனத்தின் உள்நாட்டு பெட்ரோலிய உரிமத்தை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து, இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இலங்கையின் பெட்ரோலிய உரிமத்தை 2003 ஆம் ஆண்டு பெற்றது. இது, ஜனவரி 2024 ஆம் ஆண்டு நிறைவடைவதாக இருந்தது. தற்போது, இது ஜனவரி 22, 2044 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, லங்கா ஐஓசி நிர்வாக இயக்குனர் தீபக் தாஸ் இடம் வழங்கினார். அதன்படி, இலங்கையின் பெட்ரோலிய மற்றும் இதர வாகன எரிபொருள் ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகிய நடவடிக்கைகளில் லங்கா ஐஓசி ஈடுபட முடியும். தற்போதைய நிலையில், இலங்கையின் 20% வாகன எரிசக்தி பங்குகளை லங்கா ஐஓசி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.