இலங்கையில் நாளை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்கம் திட்டம் குறித்து ஆலோசிக்க
அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் இலங்கையில் 13 வது சட்ட திருத்தபடி 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஒப்பந்தம் இடப்பட்டது. ஆனால் அவை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் அதை அமல்படுத்த நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசு முறை பயணத்திற்கு வந்த இலங்கை அதிபர் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். அதில் 13 வது சட்ட திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தபடுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய ஆலோசனை நடத்த உறுதியளித்துள்ளார். இந்தக் கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தேசிய நல்லிணக்க திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் இதில் அனைத்து கட்சிகளும் சுயேட்சைகளும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.