இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் வெற்றி பெற்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.
உமா குமரன், லண்டன் ஸ்டார்ட்போர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 19145 வாக்குகளை வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கேன் பிளாக்வெல் 3144 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஈழத் தமிழ் பெண் உமா குமரன், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அரசியல் துறையில் பட்டப்படிப்பு பயின்ற அவர், நாடாளுமன்ற ஆராய்ச்சியாளர் மற்றும் வழக்கறிஞராக இருந்துள்ளார். தொழிலாளர் கட்சியில் பல ஆண்டுகளாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.