ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சுமார் 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவுடன், உலகில் செயல்பாட்டில் இருக்கும் கோவில்களிலேயே மிகப்பெரிய கோவிலாகும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளினால் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டில் இக்கோவில் அமைந்துள்ளது மிகவும் அரிதான அமைப்பாகப் பார்க்கப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகரப் பேரரசர்கள் என, பல அரச வம்சம்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளைப் பின்வருமாறு காணலாம்: 1. பழமையான ஆலயம் சங்க […]

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சுமார் 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவுடன், உலகில் செயல்பாட்டில் இருக்கும் கோவில்களிலேயே மிகப்பெரிய கோவிலாகும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளினால் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டில் இக்கோவில் அமைந்துள்ளது மிகவும் அரிதான அமைப்பாகப் பார்க்கப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகரப் பேரரசர்கள் என, பல அரச வம்சம்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளைப் பின்வருமாறு காணலாம்:

1. பழமையான ஆலயம்

சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில், காவிரியாற்றின் இடையில் கோவில் அமைந்திருப்பதும், அங்கு பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாத சுவாமி இருப்பதும் கூறப்பட்டுள்ளது. அகநானூற்றில் பாலை உறையூர் முதுகூத்தன்னார் எழுதிய பாடல் வரிகள் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றித் தெளிவாகக் கூறுகிறது. மேலும், கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். இதன் மூலம் இந்தக் கோவிலில் 2000 ஆண்டுகளாக வழிபாடு நடந்து வருவது உறுதியாகிறது.

2. கட்டிடக் கலை

  • 156 ஏக்கர் பரப்பளவில், 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஸ்ரீரங்கம் கோவிலாகும். இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டும்தான் ஏழு பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் முயற்சியால், 1979ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று, 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடனும் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது 236 அடி உயரம் கொண்டு, ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியதாகும்.
  • அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • தான்யலக்ஷ்மி சன்னிதிக்கு அருகில் இடிபாடுகளுடன் காணப்படும் நான்கு உருளை வடிவ செங்கல் கட்டுமானங்கள் ‘திருக்கொட்டாரம்’ எனப்படும் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் ஆகும். விஜயநகரக் கோயில் கட்டடக் கலையில் இத்தகைய களஞ்சியங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழகத் திருக்கோயில்களிலேயே மிகப்பெரிய களஞ்சியங்கள் ஸ்ரீரங்கம் கோயிலில்தான் உள்ளன. மூன்று அடுக்குகளாக உள்ள இந்தக் களஞ்சியங்களில் ஒவ்வொரு நிலையிலும், தானியங்களை உள்ளே கொட்ட மிகப்பெரிய வாசல்கள் உள்ளன. மேலும், உபயோகத்தில் இருந்த காலத்தில், மழைநீரும் பிற பூச்சிகளும் சிறிதுகூட உட்புகாதபடி சிறந்த முறையில் பாதுகாக்கப் பட்டிருந்தது அறியப்படுகிறது. தமிழர்களின் கட்டடக் கலைக்கும், உணவுப் பொருள் நிர்வாகத் திறனுக்கும் ஒரு சிறந்தச் சான்றாக இவைத் திகழ்கின்றன.

3. ஓவியங்கள்

15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான, பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஓவியத் தொகுதிகள் கோவிலின் சுவர்களிலும் விதானங்களிலும் கூரைகளிலும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, கோபுர வாயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த, கோயிலின் முக்கிய உற்சவக் காட்சிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ள ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலும், இக்கோவிலில் இயற்கை முறையில் வண்ணங்கள் தீட்டப்பட்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் தந்தத்தாலான உருவங்கள் காணப்படுகின்றன. இவை தமிழர்களின் ஓவியக்கலைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

4. சிற்பக் கலை

சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சிற்ப மரபுகளும், அவற்றின் பல வகைமாதிரிகளும் இந்த ஒரே கோயிலில் காணக் கிடைப்பது ஸ்ரீரங்கத்தின் தனிச் சிறப்பாகும்.

  • விஜயநகரக் காலத்திய சேஷராயர் மண்டபம் சிற்பக் கலையின் உச்சமாகும். இவற்றில், குதிரைகளின் வால்மயிர் திரிதிரியாக செதுக்கப் பட்டுள்ள நுணுக்கமும் வீரர்களின் கண்களில் தெரியும் கடுமையும் பெண்களின் நளினமும் உயிர்த்துடிப்புள்ளவை. மேலும், விஜயநகரப் பேரரசு காலகட்டத்தில், யவனர்கள் தமிழர் படையில் சேர்ந்து போர்களில் ஈடுபட்டதும் இங்குள்ள சிற்பங்கள் மூலம் அறியமுடிகிறது.
  • கோவிலின் வேணுகோபால சுவாமி சன்னிதி ஹொய்சள சிற்பக் கலை மரபுப்படி அமைக்கப்பட்டதாகும்.
  • அரங்கநாதர் சன்னதி எதிரில், 25 அடி உயரத்தில், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் கருடாழ்வாரின் விஸ்வரூபமானச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீரங்கம் கோவில் கட்டிடக் கலை வரலாற்றின் சுவடுகள் மணலில் புதைந்துள்ளது இங்கு நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் அறியப்பட்டது. சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நூற்றுக்கால் மண்டபம், 951 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தின் அடிப்பகுதி சுவரில் ஏறத்தாழ 200 அடி நீளத்திற்கு, சுமார் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உள்ள 40 நடனச் சிற்பங்கள் உட்பட பல்வேறு புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்றவை அகழாய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அதிசயங்களாகப் போற்றப்படுகின்றன.

5. கல்வெட்டுகள் கூறும் வரலாறுகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் 600க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளது கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

கல்வெட்டுகள் மட்டுமின்றி, இந்தக் கோவிலின் வரலாற்றைக் கூறும் ‘கோயில் ஒழுகு’ என்ற நூலும் தமிழகத்தின் வரலாற்றை அறிய உதவுகிறது. கிபி 1311லும், 1323லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது கோவில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதும், 1331 படையெடுப்பின் முன் கோவிலின் உற்சவ மூர்த்தி திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதும், சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், 1371ல் உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருளச் செய்யப்பட்டதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது. இவை மூலம் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பெரிதும் அறியப்படுகின்றன.

6. தனி அடையாளங்கள்

  • இக்கோவிலின் தனிச் சிறப்பு, பக்தரான ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாகப் பச்சைக் கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்பட்டு வருவதாகும்.
  • அரங்கநாதரின் திருவுருவம் 21 அடி நீளத்தில் சுதையினால் அமையப்பெற்றுள்ளது. அதனால், ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட புனுகு சட்டம் எனப்படும் தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.
  • கிபி. 14ல் கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய கம்பராமாயணம் ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதி அருகே உள்ள நரசிம்மர் சன்னிதியில் அரங்கேற்றப்பட்டது.

மாபெரும் பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பெட்டகமான ஸ்ரீரங்கம் 108 வைணவத் திருத்தலங்களுள் முதலாவதாகும். மேலும், யுனெஸ்கோ அமைப்பால் 2017ஆம் ஆண்டு, கலாச்சாரம் பாரம்பரியம் பாேன்றவற்றை, பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோவில் பெற்றுள்ளது. இவ்வாறு, இக்கோவிலைப் பற்றிய வியப்புகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu