புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு பல்வேறு பொருட்கள் மற்றும் உடைமைகள் முழு சேதம் அடைந்தன. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக வெள்ள நிவாரண நிதி ரூபாய் 6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் 16ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.இதற்காக ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அதில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி வருகிறது. எந்த தேதியில் எந்த நாள் பணம் வாங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் இல்லை. டோக்கன் பெற்றவர்கள் வரும் 16ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.