ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம், கடந்த வாரத்தில் பொதுப் பங்கீட்டு முறைக்கு வந்தது. அதன் பின்னர், நேற்று, முதல் முறையாக பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டன. முதல் நாள் வெளியீட்டில், நிறுவனத்தின் பங்குகள் அறிமுகத் தொகையை விட 36% உயர்வில் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனம், தொழிற்சாலைகளுக்கான பியரிங் மற்றும் இதர உபகரணங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுப் பங்கீட்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள், 74.7 மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டன. சில்லறை முதலீட்டாளர்கள் 17.63 மடங்கு பங்குகளைப் பெற்றுள்ளனர். இதுவே, 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொது பங்கீட்டு விற்பனையில் மிக அதிகமான அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலையில், ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 453 ரூபாயாகப் பட்டியலிடப்பட்டது. இது, இதன் அறிமுகத் தொகையான 330 ரூபாயிலிருந்து 36% கூடுதலாகும். மேலும், நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 47% உயர்வுடன் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தையில் ஒரு பங்கின் விலை 482.7 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இந்த நிறுவனத்தின் 24.98 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும், 3.61 கோடி பங்குகள் தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4423.83 கோடி ரூபாயாக உள்ளது. இதனால், நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.














