நாட்டில் தயாரிக்கப்படும் போலி மருந்துகளை கண்டறிய நடத்தப்பட்ட சோதனையில் காய்ச்சல், சளிக்கான மருந்துகள் தரமின்றி தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், சமீபத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு நடத்தியது. அதில், 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
கடந்த மாதத்தில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. இதையடுத்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் போலி மருந்துகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், போலி மற்றும் தரமற்ற மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.














