இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “கல்வி, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தி அளப்பரிய பங்காற்றியுள்ளார். அவரை மாநிலங்களவையில் நியமிப்பதால் பிரதிநிதிகள் சபையின் மகளிர் சக்தி மேலும் வலிமை பெறும். அனைத்து பெண்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இது அமையும். சுதா மூர்த்தியின் பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்” - இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினமான இன்று சுதா மூர்த்தி நியமனம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அத்துடன், அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.














