சித்தர்கள் ஆயிரக்கணக்கில் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் சில சித்தர்கள் மட்டுமே பூத உடலோடு இந்த மண்ணில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியதோடு நின்று விடாமல் முக்தி அடைந்த பின்பும் சூட்சமமாக இருந்து பல நன்மைகளை அவர்களை வணங்கி வாழும் அத்தனை அடியார்களுக்கும் செய்து வருகிறார்கள். அப்படி அற்புதங்கள் நிகழ்த்தும் ஒரு சித்தர் தான் இந்த சுந்தரனார்.
சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். தமிழ் அகமுடையார் குலத்தில் தமிழ் மாதம் ஆவணியில் ரேவதி நட்சத்திரத்தில் தான் சித்தர் சுந்தரானந்தர் பிறந்தார் என்று அவர் வரலாறு கூறுகிறது. இவரின் குரு மகான் சட்டைமுனி. தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு இல்லறவாழ்க்கையை மேற்கொண்டு வந்தார். தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. சுந்தரனார் பல ஆண்டுகள் தவத்திலிருந்து பெரும் ஆற்றல் பெற்றார். அகத்தியர் வழிப்பட்ட லிங்கத்தை இவரும் சதுரகிரி சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி சிறப்பான பல விஷயங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார். குறிப்பாக சுந்தரனார் சிறந்த வீரன் என்றும் மிகவும் அழகானவர் என்றும் போகர் புகழ்ந்து பேசுகிறார். மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார்.
தன் அழகான தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக உண்டான சுந்தரானந்தர் என்கிற பெயர் மட்டுமல்ல சித்தருக்கு வல்லப சித்தர் என்ற இன்னொரு பெயருமும் இருக்கிறது. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் பல கணிப்புகளையும் எழுதி வைத்து சென்றுள்ளார்.
சுந்தரனார் ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமான நூல்கள் சோதிட காவியம்,வைத்தியத் திரட்டு,தண்டகம், முப்பு, சிவயோக ஞானம், அதிசய காராணம், பூசா விதி, தீட்சா விதி, சுத்த ஞானம்,கேசரி, வாக்கிய சூத்திரம், காவியம், விச நிவாரணி ஆகியவை ஆகும். இவை அனைத்தும் நமக்கு நலமான சுகமான வாழ்க்கை தர உதவும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம்.
சுந்தரானந்தர் பல இடங்களுக்கு பயணம் செய்து தன் வாழ்நாள் இறுதிகட்டம் நெருங்கும் முன்பு மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். அந்த நகர் வீதிகளில் ஆணை பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல ஆச்சரியமான சித்துக்கள் செய்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார். அவர் புகழ் நாடு முழுவதும் பெருகியது. இவரைப் பற்றி மக்களும் மன்னனிடம் தெரிவித்தனர்.
சித்தரைப் பார்க்க மன்னரே நகருக்கு வந்தார். அப்போது அங்கு வீதியில் ஒருவன் கையில் கரும்புடன் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த சுந்தரனார் உடன் பேசிக்கொண்டிருந்த மன்னர், சித்தரே இவர் கையில் இருக்கும் கரும்பை அந்த மண்டபத்தில் இருக்கும் கல்யானை உண்ணும்படியாகச் செய்ய முடியுமா என சந்தேகமாக கேட்டார். அடுத்த நொடி சுந்தரனார் அந்த இளைஞன் கையில் இருந்து கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார் உடனே யானை அந்த கரும்பை பெற்று உண்டுவிட்டு. மீண்டும் கல் யானையாகவே மாறிவிட்டது. அதைக் பார்த்த அனைவருமே வியந்து போய்விட்டார்கள். அன்பும் பக்தியும் அந்த இடத்தில் நிரம்பி வழிய நாட்டின் மன்னர் அப்படியே சித்தர் சுந்தரனார் காலில் விழுந்து வணங்கினார்.
அவரை ஆசீர்வதித்த மகான் சுந்தரனார் அப்படியே அருகில் இருந்த மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் தான் சுந்தரனார் சமாதி இருக்கின்றது.பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி கூட அமைந்திருக்கிறது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் கொண்டு ஓரு தனி அறையில் இருந்தபடி, ஒற்றை தீபம் ஒன்றை ஏற்றி முழு மன ஒருநிலைப்பாட்டோடு சுந்தரானந்தர் சித்தரை வணங்கி வந்தால். நிச்சயம் அவர்கள் அருளை உங்களுக்கு அள்ளித்தருவார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் கூட சில நேரங்களில் துணைக்கு வரமாட்டார்கள்.
ஆனால் சித்தர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்களை வேண்டுபவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு நாளில் சில நிமிடங்களையாவது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த சித்தர் வழிபாட்டிற்கு என ஒதுக்கி வழிபடுங்கள்.சித்தர் பூஜை செய்பவர்கள் இறந்தவர்களுக்கு திதி பார்த்து தவசம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை என ஆன்றோர்கள் பலரும் கூறுகின்றனர். அமைதியாய் சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள். சுந்தரானந்தரை வணங்குவதால் எப்போதும் மனமகிழ்வோடு சுகமாக வாழ்ந்து உயர்ந்த நிலையை அடையலாம் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.