பாகிஸ்தானில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் உள்ள பவேலி என்கிற இடத்தில் நேற்று போலியோ தடுப்பு மருந்து முகாம் நடந்தது. இதையொட்டி போலியோ தடுப்பு குழு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ரிக்ஷாவை போலீஸ் வாகனத்தின் மீது மோதி வெடிக்க செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 23 போலீசார் உள்பட 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.