பாகிஸ்தானில் தற்கொலைப்படை பெண் பயங்கரவாதி மஹால் பலூச்சை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பிரிவுக்கு ஆதரவளிக்கும்படி மஹால் பலூச் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலூசிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான தற்கொலை படை பயங்கரவாதியான மஹால் பலூச், குவெட்டா நகரில் முக்கியம் வாய்ந்த பகுதிகளை அல்லது பாதுகாப்பு படையினரை தாக்க திட்டமிட்டு இருந்துள்ளார் என கூறியுள்ளார்.
எனினும், மஹால் பலூச்சை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பலூசிஸ்தானின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்ற அவர்கள், உடனடியாக பலூச் விடுதலை செய்யப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.