தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழ் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் தொடர்பான மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழே இருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்த வாசகம் நம் நாட்டின் மத சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளது. ஒரு மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதால் அதனை நீக்க வேண்டும். குறிப்பாக கோயில்கள் முன் இருப்பதையாவது உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பெரியார் சிலை விவகாரத்தில் அதன் பராமரிப்புக்காக தமிழக அரசு தரப்பில் தொகை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. எனவே பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படையில் மனதை புண்படுத்தும் வாசகங்களை அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி தமிழக அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.














