உச்ச நீதிமன்ற குளிர்கால விடுமுறை இன்று துவங்குகிறது. இதனால், 2 வாரங்களுக்கு எந்த அமர்வும் செயல்படாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார்.
உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் தற்போது கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த ஆணையத்தை கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்ற கூட்டரங்கில் வழக்கறிஞர் மத்தியில் நேற்று பேசுகையில்,‘‘ உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வரும் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் எந்த அமர்வுகளும் செயல்படாது’’ என்றார்.














