மேற்கு ஆப்பிரிக்காவில் புர்கினா பாசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. தற்போது, இந்த நாட்டில் பயங்கரவாத அமைப்பு ஒன்று நடத்திய தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
புர்கினா பாசோவில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ராணுவ வீரர்கள் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக, அவ்வப்போது முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் ஓவ்கடோக்கில், நேற்று முன்தினம் ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். இந்த முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 33 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அந்நாட்டின் ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.