ஸ்விக்கி நிறுவனம், தனது செலவினங்களை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதே வேளையில், தனது தளத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயனர்களுக்கு பயன்பாட்டு அம்சங்களை எளிமையாக வழங்குவதிலும் முனைப்புடன் ஈடுபட உள்ளது. எனவே, பிளாட்பார்ம் கட்டணமாக 2 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
ஆர்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆர்டர், எத்தனை தொகையாக இருந்தாலும், பாரபட்சம் இன்றி பிளாட்பார்ம் கட்டணம் 2 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெங்களூரு ஆர்டர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விரைவில், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவு ஆர்டர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் எனவும், இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு கிடையாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. ஸ்விக்கி நிறுவனம், நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் ஆர்டர்களை நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. எனவே, ஆர்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் என்பது நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.